வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்
வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்
வீணை செய்யும் ஒலியி லிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தி னுண்ணின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்
(வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்)
மாதர் தீங்குரற் பாட்டி லிருப்பாள்
மக்கள் பேசும் மழலையி லுல்லாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியி னாவை இருப்பிடங் கொண்டாள்
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈத னைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்
(வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்)