அணுவிற்குள் அணுவும் நீ
அணுவிற்குள் அணுவும் நீ அண்டங்கள் அனைத்தும் நீ
ஆள்கின்ற அரசியும் நீ
கணுவிற்குள் கணுவும் நீ கரும்புக்குள் சுவையும் நீ
கருணைக்கு எல்லையும் நீ
விண்ணும் நீ மண்ணும் நீ விகசிக்கும் ஒளியும் நீ
வேதத்தின் மூலமும் நீ
பண்ணும் நீ பனுவல் நீ புலவர்க்கு பொருளும் நீ
பாருக்கு அன்னையும் நீ
அகிலம் எல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியே
அன்புவடி வான உமையே
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!
கன்றுக்கு பசுவாக குன்றுக்கு ஒளியாக
என்றைக்கு நீ வருவாய்?
மன்றாடும் பிள்ளைக்கு குன்றாத அன்பதனை
என்றைக்கு நீ தருவாய்?
மண்ணுக்கு மழையாக விண்ணுக்கு நிலவாக
என்றைக்கு நீ வருவாய்?
கண்ணுக்குள் ஒளியாக நெஞ்சுக்குள் சுடராக
என்றைக்கு நீ ஒளிர்வாய்?
இருளுக்குள் அகப்பட்டு பலவாறு வதைபட்டு
ஒளிஉன்னைத் தேடி வந்தேன்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!
விழியுண்டு ஒளியில்லை இருளுண்டு விளக்கில்லை
வழிகாட்ட நீ வருவாய்
விதியுண்டு கதியில்லை மருளுண்டு தெளிவில்லை
மருள்நீக்க நீ வருவாய்
நதியுண்டு நீரில்லை நிலமுண்டு பயிரில்லை
வளம்சேர்க்க நீ வருவாய்
சதிசெய்யும் மதியுண்டு மதிசெய்யும் வலியுண்டு
வலிதீர்க்க நீ வருவாய்
கதியென்று யாருண்டு உனையன்றி எவருண்டு
காப்பாற்ற நீ வருவாய்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!
வேரற்ற மரமாகி வீழ்ந்து விட்டேன் அம்மா
வேராக நீ வருவாய்
நோயுற்ற உயிராகி நொந்து விட்டேன் அம்மா
மருந்தாக நீ வருவாய்
பாதையற்ற வழியில் பயணிக் கின்றேனம்மா
பாதையாய் நீ வருவாய்
நாதியற் றிவ்வுலகில் நலிந்து விட்டேனம்மா
நலம்செய்ய நீ வருவாய்
பேதையென் குரல் கேட்டும் பேசாமலிருப்பதுவும்
தாயுனக் கழகுதானோ?
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!
ஏதொன்றும் அறியாமல் நான்செய்த பிழையாவும்
பொறுத்தருள வேண்டுமம்மா
தீதென்று அறியாமல் தீவினையில் வீழ்ந்தஎன்னை
காத்தருள வேண்டுமம்மா
அகிலங்கள் அனைத்துக்கும் அன்னையே உன்னையே
சரணென்று பணிந்து விட்டேன்
ஆகாய கங்கையென பொங்கிவரும் உன்கருணை
மழைநனைய வந்து விட்டேன்
நொடியு மகலாதஅன்பை யுந்தன்திரு வடிகளிலே
தந்தெனக்கு அருளிடு வாய்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!