Karpura Nayagiye Kanakavalli Lyrics in Tamil
கற்பூர நாயகியே கனகவல்லி
கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்தவல்லி தெய்வயானை அம்மா
விற்கோல வேதவல்லி விசாலாக்ஷி
விழிக்கோல மாமதுரை மீனாக்ஷி
சொற்கோவில் நான் அமைத்தேன் இங்கு தாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே.
புவனமுழுதாளுகின்ற புவனேச்வரி
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேச்வரி
நவநவமாய் வடிவாகும் மகேச்வரி
நம்பினவர் கைவிளக்கே சர்வேச்வரி
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீச்வரி
காரிருளின் தீச்சுடரே ஜோதீச்வரி
உவமானப்பரம்பொருளே ஜகதீச்வரி
உன்னடிமைச் சிறியேனை நீ ஆதரி.
உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறவிடத்தில் முறையிடுவேன் தாயே எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கொஞ்சிடுதல் முறையோ அம்மா
கண்ணீரைத் துடைத்துவிட ஓடிவாம்மா
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா
சின்னவனின் குரல்கேட்டுன் முகம் திருப்பு
சிரித்தபடி என்னைத்தினம் வழியனுப்பு.
கண்ணிரண்டும் உன்னுருவே காணவேண்டும்
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்
பண்ணமைக்கும் நாஉனையே பாடவேண்டும்
பக்தியொடு கையுனையே கூடவேண்டும்
என்ணமெலாம் உன்நினைவே ஆகவேண்டும்
இருப்பதெல்லாம் உன்நினைவே ஆகவேண்டும்
மன்ணளக்கும் சமயபுர மாரியம்மா
மகளுடைய குறைகளையும் தீருமம்மா.
நெற்றியுலும் குங்குமமே நிறையவேண்டும்
நெஞ்சினிலுன் திருநாமம் வழிய வேண்டும்
கற்றதெல்லாம் மென்மேலும் பெருக வேண்டும்
கவிதையிலே உன்நாமம் வாழவேண்டும்
சுற்றமெல்லாம்நீடூழி வாழ வேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆளவேண்டும்
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா ?
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா ?
அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ?
அருள்செய்ய இந்நேரம் ஆவதுண்டோ?
கண்ணுக்கு இமையன்றிக் காவலுண்டோ?
கன்றுக்குப் பசுவன்றிச் சொந்தமுண்டோ?
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ?
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ?
எண்ணைக்கும் விளக்குக்கும் பேதமுண்டோ ?
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ?
அன்புக்கே நானடிமை ஆகவேண்டும்
அறிவுக்கே என்காது கேட்கவேண்டும்
வம்புக்கே போகாமல் இருக்கவேண்டும்
வஞ்சத்தை என்னெஞ்சம் அறுக்கவேண்டும்
பண்புக்கே உயிர்வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்
என்பக்கம் இவையெல்லாம் இருக்கவேண்டும்
என்னோடு நீயென்றும் வாழவேண்டும்.
கும்பிடவோ கையிரண்டு போதவில்லை
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை
செம்பவழ வாயழகி உன்னெழிலோ
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை
அம்பளவு விழியாளே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை.
காற்றாகிக் கனலாகிக் கடலாகினாய்
கயிறாகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகிப் பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை.